அரியலூர், மே 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், உயர்த்தப்பட்ட எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் விலையை குறைக்க வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள கட்டட அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். 28 சதவீதம் வரையுள்ள கட்டட பொருள்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். கல்குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க மாவட்டத் தலைவர் அழகுதாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் விஸ்வநாதன், ஜெயங்கொண்டம் மண்டலத் தலைவர் மார்டின், தமிழ்நாடு ஃப்ளையஷ் அண்ட் பிளாக்ஸ் சிடிஒ நிர்வாகி சுந்தரி மற்றும் அரியலூர், ஜெயங்கொண்டம் கட்டட பொறியாளர்கள், அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கட்டுமான பொருள்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.