சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் குரு லிங்கம் சங்கமமாக சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதராக எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
இங்கு அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளதால் காசிக்கு இணையான பைரவ தலமாக போற்றப்படுகிறது. குமாரவேளும், காளியும், பிரம்மனும் பூசித்த தலம்.
இத்தளத்தில் அவதரித்த ஞானசம்பந்த பெருமானை இக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களை உள்ளடக்கிய பிரம்ம தீர்த்த கரையில் விட்டு விட்டு அவரது தந்தை நீராட பசியால் அழுத ஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டி பசி தீர்க்க வாயில் பால் ஒழுகி நின்ற குழந்தையிடம் அவரது தந்தை யார் அளித்த பாலை உண்டாய் என கேட்டபோது ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் சுவாமி, அம்பாளை சுட்டிக்காட்டி தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரத் திருப்பதிகத்தை பாடினார்.
இந்நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறுகிறது. இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று திருமுலைப்பால் விழா கோலாகலமாக நடந்தது. திருமுலைப்பால் விழாவை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் திருஞானசம்பந்த பெருமான் பல்லாக்கில் எழுந்தருள ஓதுவார்கள் தேவாரப் பதிகம் பாட கோவில் பிரகாரம் வந்து பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளினார். தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் உமயம்மை தங்கக் கிண்ணத்தில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்த பெருமானுக்கு சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குழந்தைகள் ஞானம் பெற வேண்டி பலா, வாழை, பேரீச்சம் பழங்கள், சர்க்கரை கலந்த பாலை சுவாமி அம்பாள் மற்றும் திருஞானசம்பந்த பெருமானுக்கு நெய்வேதியம் செய்து வழிபட்டனர்.
விழாவில் முன்னதாக சிதம்பரம் செல்வமுத்துக்குமார சுவாமி ஓதுவாருக்கு தருமபுரம் ஆதீன குருமஹா சன்னிதானம் திருமுறை கலாநிதி பட்டத்தை வழங்கினார்.