தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!
பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த நமக்கு நாமே திட்டம் 2024-2025ன் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பிணை கடந்த 04.04.2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டு இருந்தார். இந்த ஒப்பந்த புள்ளியை வரும் 25.04.2025 ஆம் தேதி மாலை 3.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும், அதேபோல் இந்த ஒப்பந்த புள்ளியானது அதே தினத்தில் மாலை 3.30 மணியளவில் திறக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த ஒப்பந்த புள்ளியில் ரூபாய் 30.00 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபாதையுடன் கூடிய புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் (185/24-25/AEE(E) கோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பணியை மேற்கொள்வதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு முன்பாகவே சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதே போன்று அந்த ஒப்பந்த புள்ளியில் கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள ஆயிரம்பிறை பூங்காவில் ரூபாய் 15.60 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு வேலி அமைப்பதற்கும் (Grill/Fencing) மின் இணைப்பு பணியை மேற்கொள்வதற்கும் ஒப்பந்தம் (188/24-25/AEE(W)) கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பூங்காவை சென்று பார்த்த போது அங்கு ஏற்கனவே கிரில் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டும் அதேபோல் மின்இணைப்பு பணிகளும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பி அன் டி காலனி 12-ஆவது தெருவில் கடந்த 17.02.2025 அன்று திருமதி கனிமொழி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் வெளிப்புறச் சுவர் மற்றும் வெளிப்புற விளையாட்டு திடல் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள ரூபாய் 31.50 மதிப்பீட்டில் ஒப்பந்தம் (184/24-25/AEE(W) கோரப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் ஏற்கனவே சுற்றுச்சுவர் இருக்கும் போது ஏன் புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்ற கேள்வியும், அதேபோன்று எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் ஏன் இந்த மைதானம் கனிமொழி முன்னிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக திறப்பு விழா கொண்டாடப்பட்டது என்ற சந்தேகமும் எழுகின்றது.
இவ்வாறாக கடந்த 04.04.2025 அன்று தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளியில் பல்வேறு முறைகேடுகள் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளது என்பதும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் மதுபாலன் அவர்கள் தங்களது அதிகாரத்ததை தவறாக பயன்படுத்தி ஏற்கனவே முடிந்த வேலைக்கு ஒப்பந்தபுள்ளியை கோரி முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது வெளிப்படையாக தெளிவாகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக விசாரணை செய்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது..