தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.09.23 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாடகை கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 17 மாதங்களாக கந்தசாமிக்கு வாடகை பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் அதிகாரிகள் தராமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கந்தசாமி இந்த மாதம் மூன்றாம் தேதி கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இன்று காலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் அலுவலகத்தை திறக்க வந்த ஊழியர்கள் திறக்க முடியாமல் காத்திருக்கின்றனர். மேலும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தங்கள் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு செல்வதாக தெரிவித்துவிட்டனர்.
17 மாதங்களாக வாடகை தரவில்லை என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட சம்பவம் கழுகுமலை பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.