தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்.
நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் ரேவதி தலைமை தாங்கினார். அதில் மணக்கடவு ஊராட்சியை சேர்ந்த கொல்லப்பட்டி, பச்சாபாளையம் காட்டம்மன் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மணக்கடவு ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பட்டி,தேர் பட்டி,பச்சாபாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாகவும்,தற்போது கோடை காலமாக இருப்பதால் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதாகவும், இதனால் குடிநீர் தேவைக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து நாங்கள் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் பொறியாளரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று எங்களுடைய குடிநீர் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்துள்ளார்.அதன்படி ஒரு வாரத்திற்குள் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை எனில் பொதுமக்கள் ஒன்று கூடி அதிகாரிகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என்று கூறினர்.
தாராபுரம் அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என மக்கள் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.