கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா உலக காச நோய் தினம் குறித்து பேசியதாவது
உலக காசநோய் தினம் என்பது 1982 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும் , இது காசநோயைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சாதனைகளை நினைவுகூர்ந்து போற்றும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. காசநோய் மற்றும் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு, நோயை முடிந்தவரை ஒழிப்பதற்கான வளர்ந்து வரும் இயக்கத்தில் அனைவரும் இணையவும் இது ஊக்குவிக்கிறது.
உலக காசநோய் தினம், காசநோய் இன்னும் மரணத்திற்கு காரணமான தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது. காசநோய் குணப்படுத்தக்கூடிய மற்றும் தடுக்கக்கூடிய நோயாக இருந்தாலும், காசநோயைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வு தேவையாக உள்ளது.
காசநோய் என்பது நுரையீரலைப் பொதுவாகப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். காசநோய் இருமல், தும்மல் மற்றும் துப்புதல் மூலம் காற்று வழியாகப் பரவுகிறது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே அனைவரும் காசநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்