திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் இலட்சார்ச்சனை விழா, குத்துவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுமங்கலிகள் கலந்து கொள்ளும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். குத்துவிளக்கு பூஜையை திப்பிராஜபுரம் சிவஸ்ரீ, டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் (சுரேஷ்) குழுவினர் மற்றும் முன்னாள் தலைமை அர்ச்சகர் இரா.செல்வம்பூசாரியார் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
