பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டது.
ஆழியாறில் உள்ள அறிவுத்திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 115வது ஜெயந்தி தினம் உலக அமைதி தின விழாவாக நடைபெற்றது. உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் வரவேற்றார். ஆழியார் அறிவுத்திருக்கோயில் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்
உலக அமைதிக்கு வேதாத்திரியம் என்ற தலைப்பில் தென்காசியைச் சேர்ந்த பேராசிரியர். ராமச்சந்திரன் பேசுகையில் இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் யாரிடமாவது நலம் விசாரித்தால், நூற்றுக்கு 90 பேரிடம் சலிப்பான விரக்தியான பதில் தான் வருகிறது.
இதற்குக் காரணம் நவீன உலகத்தில் மனிதனால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை. அதிலும் செல்போன் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இதற்கு ஒரே வழி நம் மனதை பக்குவப்படுத்துவதே தனிமனித அமைதி தான் உலக அமைதிக்கு வழி காட்டும். அந்த தனிமனித அமைதிக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதைத்தான் மகரிஷி விளக்கமாக கூறியுள்ளார்.
உலகில் நடக்கும் போர்களுக்கு எல்லாம் கோட்பாடுகள் காரணம் என்று சொல்கிறார்கள். அப்படியானால் ஒரே கோட்பாடுகள் கொண்ட இரு நாடுகள் ஏன் சண்டை இடுகின்றன மதங்களை காப்பாற்றுவதற்காக போரென்று சொன்னால் ஒரே மதத்தைச் சேர்ந்த ரெண்டு தேசங்கள் ஏன் போரிடுகின்றன
தேச பக்தர்கள் தியாகிகள் வீரம் என்கிற பெயரில் வீரர்கள் உலகத் தலைவர்களும், ஆயுத தளவாட உற்பத்தியாளர்களும் ராணுவ வீரர்களை பலிகடா ஆக்குகிறார்கள் அணுகுண்டுக்கு இன்னொரு அணுகுண்டால் பதில் சொல்ல முடியாது. அமைதி பேச்சுவார்த்தையால்தான் பதில் சொல்ல முடியும். அணு யுத்தம் என்று ஒன்று வந்தால் அதில் தோற்றவனும் இருக்க மாட்டான். வென்றவனும் சில ஆண்டுகளுக்குள் காணாமல் போய்விடுவான் இவ்வாறு அவர் பேசினார்.
