சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொல்குடி தமிழ் சமூகத்தின் தோலிசைக் கருவியான பறை குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், தமிழிசை தாளக் கருவிகளில் ஒன்று பறை இசைக் கருவியாகும். பறை தோலால் ஆனதாகும். ‘பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ எனப்பொருள்படும் ‘அறை’ என்ற சொல்லினின்று ‘பறை’ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து, தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம் என வருணிக்கப்படுகிறது. “பறை” என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என முனைவர் வளர்மதி தன்னுடைய “பறை’ ஆய்வு நூலில் விளக்குகிறார்.
பறை இசைக் கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு ஆகியவையாகும். 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும்.
தப்பு கருவியினை, இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடது கையில் வைத்திருக்கும் குச்சி ‘சிம்புக்குச்சி’ அல்லது சுண்டுகுச்சி எனப்படும். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும், இக்குச்சியானது ஒன்றே கால் அடி நீளமும் ஒரு செ.மீ. அகலமும் கொண்டது. வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும்.
இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும் இவற்றை அடித்து ஓசை எழுப்பப்படும். சிம்புக்குச்சி நீண்ட தட்டையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிப்பர்.
அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும்.
குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பண்டைய இசைக்கருவிகள் சொற்கட்டு எனப்படும் மெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சொற்கட்டுகள் பல்வேறு வகைகளில் பெற்ற அனுபவம், முன்மாதிரிகளால் உருவானவை. பறை என்பது ‘பேசு’ அல்லது ‘சொல்’ என்ற பொருள் தரும். வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்ட தமிழகப் பண்பாட்டில், பறையடிப்பது தொடர்பான மெட்டுகள் எழுதி வைக்கப்படவில்லை. பறை இசைப்பவர்களின் கூர்ந்த கவனிப்பு, போலச் செய்தல், பயிற்சி, இசையின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
டன்டனக்கு டனக்குனக்கு
டன் டன் டன் டன்டனக்கு
ரக்கட்ட ரக்கட்ட ரக்கட்ட
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
என்ற வகையில் பறை இசைப்பதற்கான சொற்கட்டுகள் அமைகின்றன. சொற்கட்டுகள் அடிப்படை அடிகளைத்தான் சுட்டுகின்றனவே தவிர மொத்த மெட்டையும் சுட்டுவதில்லை. அதேநேரம் ஒரு அடிப்படை சொற்கட்டைக் கொண்டு, இசைப்பவர் தனது கற்பனைக்கு ஏற்ப புதிய இசைக்கோலங்களை உருவாக்கலாம்.
பறையானது மாட்டுத்தோலில் செய்யப்படுவதால் இசைக்க ஆரம்பிக்கும் முன் பறையடிப்பவர்கள் பறையைத் தீயில் காட்டுவார்கள். அது தோலில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி, தோலை இறுகச் செய்யும். தோல் உறுதியாகி, அடிக்கும்போது உயர் சுருதியில் நல்ல ஓசையை எழுப்பும்.
பறையோடு இணைக்கப்பட்ட தோலை இடதுப்பக்க கைக்குள் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும். பிடிக்க எளிதாக இருப்பதால் பறையை கையில் வைத்துக் கொண்டு நிற்கலாம், நடக்கலாம், நடனமும் ஆடலாம். அதிலிருந்துதான் பறையாட்டம் பிறந்தது. பறை இசையில் பல வகை அடிகள் உண்டு. இவ்வாறு அடித்தலால் ஏற்படும் பறை இசைக்கேற்ப நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என ஆடும் கலை பறையாட்டம் எனப்படுகிறது
சங்க காலம், சோழ, பாண்டிய அரசர்கள் காலத்தில் பறை இசைக்கப்பட்டது தொடர்பான குறிப்புகள் உள்ளன. அரசர்களது அறிவிப்புகளை மக்களுக்கு முரசு அறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபு.
ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட, பெருகிவரும் புனலை அடைக்க,
உழவர் மக்களை அழைக்க,போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க, அறுவடை செய்ய,காடுகளில் விலங்குகளை விரட்ட,மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில்,கூத்துகளில், விழாக்களில், இறப்பில் எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் ‘பறை’ இணைந்து இயங்கியுள்ளன என்றார்.
