ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் 500 க்கும்
மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை.
இப்பகுதி மக்கள் கமுதி செல்ல வேண்டுமென்றால் ஊரில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து கமுதி – கீழ்குடி சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.இந்நிலையில் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி, முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர்வாரியத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக கமுதி சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி அமைச்சர் கோரிக்கை பரிசீலிக்கபட்டு நேற்று கமுதியில் இருந்து பம்மனேந்தல் செல்லும் பேருந்து வண்ணாங்குளம் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது. இந்த பேருந்தில் மகளிர் பயணம் செய்வதற்கு இலவசமாகும். மேலும் இதுவரை தங்கள் பகுதிக்கு பேருந்தே வராததால் இந்த கிராம மக்கள் புதிதாக பேருந்து வந்த போது குலவை போட்டு, வரவேற்று பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து குலவை போட்டு வரவேற்று அந்த பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
பேருந்து வந்தது முதல் கிளம்பியது வரை பெண்களின் குலவை சத்தம் அப்பகுதியை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு கிராமமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக இந்த பேருந்தை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்
கொடியசைத்து துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் தொமுச பொதுச்செயலாளர் பச்சமால், அரசு பேருந்து கிளை மேலாளர் ராஜ்குமார் மற்றும் பார்த்திபனூர் முன்னாள் சேர்மன் சேதுதினகரன் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்
