புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டியில் வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா துண்டு பிரசுரம் வழங்கி வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசும்பொழுது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை சதமடித்து வருகிறது. அதோடு வெப்பஅலையும் கடுமையாக வீசிக் கொண்டிருக்கிறது.
வெப்ப அலை வரும் நாட்களில் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடுமையான இந்த வெப்ப அலை தமிழகத்தையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வெப்பநிலை உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். குறிப்பாக வயதான பெரியவர்கள் சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு போன்ற பாதிப்புள்ள மக்களுக்கு இந்த வெப்பநிலை அதிக பாதிப்பை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
தீவிரமான மற்றும் நீடித்த வெப்ப அலைகள் மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றது. மேலும் இந்த மாறிவரும் சூழ்நிலையினால் நீடித்து செழித்து வளர மனித தாவர மற்றும் விலங்கினங்களின் தகவமைப்பும் திறன்களை பாதிப்படையச் செய்கின்றது.
மனித வாழ்க்கைக்கு வெப்பநிலை வரம்புகள் அறுபது சதவீதம் ஈரப்பதத்துடன் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் தேவைப்படுகிறது . இருப்பினும் தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வரம்பு தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.
அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. ஆகவே மக்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் பொதுமக்கள் குழந்தைகள் பெற்றோர்கள் அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறது. முன்னெச்சரிக்கை நிகழ்வாக ஏராளமான தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைட் நிறைந்த தாது உப்புகள் திரவங்களை தேவைப்படும் பொழுது குடிப்பதன் மூலம் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் வீட்டிலேயே எலக்ட்ரோலைட் தயாரிக்கும் செய்முறை குறித்து விளக்கப்பட்டது.
வெப்ப அலையின் போது ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும், வெப்ப பக்கவாதத்தால் ஏற்படும் கடுமையான நோய்களை தடுக்கவும்,
குறிப்பாக மதியம் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
தாகம் இல்லாவிட்டாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை அடிக்கடி குடிக்கவும். லேசான, வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்துளைகள் கொண்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெயிலில் வெளியே செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள், குடை/தொப்பி, காலணிகள் அல்லது செருப்புகளைப் பயன்படுத்துங்கள்.
வெளியில் பயணம் செல்லும் பொழுது தண்ணீரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
உடலை நீர்ச்சத்து இழக்கச் செய்யும் தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்கவும். அதிக புரதச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும்,
வெளியே வேலை செய்தால், ஒரு தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்துங்கள், மேலும் உங்கள் தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களில் ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.
நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்கவும். உடலை மீண்டும் நீரேற்றம் செய்ய உதவும் ஒஆர்எஸ் கரைசலை வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான எலுமிச்சை நீர், மோர் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.
விலங்குகளை நிழலில் வைத்து, குடிக்க நிறைய தண்ணீர் கொடுங்கள்.
உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள்,அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்கவும் மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கோடைகால வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று பேசினார்.