மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேச்சு..
தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் கல்லை கூட பொன்னாக்கலாம் என்று தயான் சந்த் விருது பெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேசினார்.
இது பற்றிய விபரம் வருமாறு,மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்று தயான் சந்த் விருதினை ஜனாதிபதியிடம் பெற்ற முதல் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமாருக்கு ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வொகேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது.
இதனை ஆடிட்டர் சேது மாதவா வழங்கினார். மேலும் இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு பதக்கங்களை பெற்ற பிரசாந்த், முனியசாமி, அமுல்யா ஈஸ்வர், ஜாஸ்மின், பாண்டி மீனா, குமரவேல் உட்பட ஆறு வீரர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
விழாவில் தடகள பயிற்சியாளர் ரஞ்ஜித் குமார் நம்பிக்கை தான் வாழ்க்கை என்ற தலைப்பில் பேசியதாவது, ‘ நாம் எந்த முயற்சி எடுத்தாலும் தன்னம்பிக்கை
யோடு ஈடுபட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இதற்கு உதாரணம் நான் தான். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளி கள் தானாக முன்னேற முடியாது.
எங்களை கை தூக்கி விட பிறர் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு ரோட்டரி சங்கங்களை போன்ற சமூக அமைப்புகள் கை தூக்கி விடுகின்றனர்.
மாற்றுத்திறனாளி கள் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் எதிலும் சாதிக்க முடியும். அதே நேரத்தில் எந்த நிலை வந்தாலும் வந்த நிலையை மறக்கக்கூடாது. மேலும்.சிகரம் தொட்டாலும் தலைக்கனம் வரக்கூடாது.
சிகரத்தை தொட வேண்டும் என்ற தன்னம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்க வேண்டும்.தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் கல்லைக் கூட பொன்னாக மாற்றலாம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், வழக்கறிஞர் கார்த்திக், நவநீதகிருஷ்ணன், கனி உட்பட பலர் பங்கேற்றனர்.முடிவில் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.