திருக்கோவிலூர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாளாக அறிவிக்க கோவல்தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தமிழ்நாடு முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முதன் மொழியாகவும், பல்வேறு கிளை மொழிகளுக்குத் தாயாகவும் விளங்குகின்ற நம் தாய்த் தமிழ் மொழி, இந்தியாவின் செம்மொழி என்று முதன் முதலாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் ஒன்றிய அரசால் அறிவிக்கப் பட்ட நிலையில், இந்தியாவின் இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் தமிழ் மொழியின் இலக்கணம், இலக்கியம், நாகரிகம், பண்பாடு. பொதுமைப் பண்பு, செழுமை, தமிழ்ச் சிந்தனை மரபு அதன் பங்களிப்பு குறித்தும் அதிகம் பேசப் பட வேண்டிய நிலை உள்ளது.
இந்தியாவின் பிறமொழிகளை, குறிப்பாக சமற்கிருதம், இந்தி, பரப்புவதற்கும், பிற தேசிய இன மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் உகந்த வகையில் அம்மொழிகளுக்கு என ஒரு சிறப்பு நாள்கள் அறிவிக்கப் பட்டு இந்திய ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் செப்டம்பர் 14 இந்தி மொழி நாள், செப்டம்பர் 14-23 இந்தி வாரம், ஆகசுடு முழு நிலவு நாள் சமற்கிருத நாள் எனவும் கொண்டாடப் பட்டு வருகிறது.
உலக அளவில் ஆங்கில மொழி நாள் ஏப்பிரல் 23, பன்னாட்டு மன்ற அலுவல் மொழிகளான பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், அரபு மொழிகளுக்கென தனித்தனி சிறப்பு நாள்கள் அறிவிக்கப் பட்டு கொண்டாடப் பட்டு வருகின்றன. உலகிலேயே தாய் மொழிக் காப்பிற்காக எண்ணற்ற உயிர் ஈகம் 1930 களிலேயே தமிழர்களால் தரப் பட்டிருந்தாலும், 1952 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிசுத்தானில் ( இன்றைய வங்காள தேசம்) நடைபெற்ற உருது மொழித் திணிப்புக்கு எதிராக வங்காள மாணவர்கள் போராடி ஐந்து மாணவர்கள் கொல்லப் பட்ட பெப்ருவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் எனவும் அறிவிக்கப் பட்டு கொண்டாடப் பட்டு வருகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக மகாகவி பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11. பாரதீய பாஷா திவஸ் என்ற பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் கொண்டாடுமாறு இந்திய ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 29 ஆம் நாளை தமிழ் கவிஞர் நாள் என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாட கடந்த 2015. 16 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அது ஒரு மாநில விழாவாக இருக்கிறது. இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடும் நாளாக உலகத் தமிழ் மொழி நாள் என்று அறிவித்தால் மேலும் அது பாவேந்தருக்குச் சிறப்பினைச் சேர்க்கும்.
தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் இன நலம் குறித்து புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதி தாசன் அவர்களைப் போல இதுவரை எவரும் பாடியதில்லை. தமிழ்மொழியின் மேன்மைகளை மட்டுமல்ல. அவற்றின் சிறப்பை தொடர்ந்து பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை அடுக்கடுக்காய் திட்டங்களை வகுத்துத் தந்தவர் நமது புரட்சிக்கவிஞர் பாரதி தாசன். எனவே,அவரது பிறந்தநாளாம் ஏப்.29-ஆம் நாளை உலகத் தமிழ் மொழி நாள்” (World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) என அறிவிப்பது பொருத்தமாக அமையும் என்று கருதுகிறோம். இந்தக் கருத்தை உலக நாடுகளில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஏற்று கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பதையும் இவண் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
“உலகத் தமிழ் நாள்” (World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) என்ற பொது அறிவிப்பை தமிழ் நாடு அரசு வெளியிட வேண்டும் என திருக்கோவலூர் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பாக தமிழ் நாடு அரசை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். அன்றைய நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் கொண்டாடி, தமிழ் மொழிக்காப்பு உறுதிமொழியை எடுக்கவும் பெருமைகளைப் பேசவும் இந்த அறிவிப்பு வழி வகுக்கும்.
எங்களின் இந்த வேண்டுகோளை ஏற்று தங்களின் சீரான தலைமையில் இயங்கும் திராவிட மாடல் அரசு மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் என நம்புகின்றோம் என்று கூறியுள்ளார்.