தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே கொடூரம்-பாட்டி திட்டியதால் விபரீதம்! பேரன் அரிவாளால் தலையை துண்டித்து கொலை!

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே, அடிக்கடி அறிவுரை கூறியதற்காக, பாட்டியின் தலையை அரிவாளால் துண்டித்து கொன்ற பேரன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டடத்தை அடுத்துள்ள பெரியகுமாரபாளையம் செட்டிகாரதோட்டத்தைச் சேர்ந்த பச்சியப்பர், இவரது மனைவி மயிலாத்தாள் (80). பச்சியப்பர் இறந்துவிட்டதால், மயிலாத்தாள் தனது மகன் கோவிந்தராஜ் மற்றும் விவசாயியான பேரன் விஜயகுமார் (40) ஆகியோருடன் வசித்து வந்தார்.

விஜயகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அப்பகுதி மக்களுடனும் குடும்பத்தாருடனும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பாட்டி மயிலாத்தாள் கண்டித்து, “மதுக்குடிக்காமல் ஒழுக்கமாக இரு, வாழ்க்கையை சீர்படுத்து” என அடிக்கடி அறிவுரை கூறி வந்தார்.

ஆனால், பாட்டியின் அறிவுரையைக் கேட்காமல் வந்த விஜயகுமார், நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, பாட்டியிடம் செலவுக்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது மயிலாத்தாள், “பணம் இல்லை, நீ இப்படி மது குடித்து வீட்டிற்கு வரக்கூடாது” என்று திட்டியதாக தெரிகிறது.

இதனால் கடும் கோபமடைந்த விஜயகுமார், வீட்டுக்குள் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ஆடு அறுப்பது போல பாட்டியின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுள்ளார். சம்பவ இடத்திலேயே மயிலாத்தாள் உயிரிழந்தார்.

கொலை செய்த பின்னர், விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்றார். தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசார் விரைந்து வந்து, மூதாட்டியின் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

பின்னர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, கொலை செய்த பேரன் விஜயகுமாரை கைது செய்தனர் மதுக்குடிக்காதே என்று அறிவுரை கூறிய பாட்டியின் தலையை வெட்டி கொன்ற பேரன் சம்பவம், குண்டடம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“பாட்டியின் அறிவுரை உயிரை காவு கொண்டது!” — குண்டடம் கிராமம் பரபரப்பு, மக்கள் துயரம்.