தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரியலூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி சைபர் சேப்டி கிளப் இணைந்து தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மீனாட்சி ராமசாமி கல்வி குழும தலைவர் ரகுநாதன், இயக்குனர் ராஜமாணிக்கம், நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன் வழிகாட்டுதலில் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பழனிவேல் துவக்க உரையாற்றினார்.தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ராஜன் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய முதல் நிலை காவலர் சுதாகர், வசந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சிஏஜி உறுப்பினர் சிவசங்கர் சேகரன் பேசுகையில்,
உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சீனாவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான இணைய பயனர்களைக் கொண்ட நாடு இந்தியா ஆகும். தொலைத் தொடர்பு ஒழுங்கு முறையான காலத்திற்கு ஏற்ப பயனர்கள் பயனடையும் வகையில் கட்டணத்தை வடிவமைத்து வெளிப்படை தன்மை செயல் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். அதே நேரத்தில் சட்டவிரோத ஊடுருவல்களும் நடைபெறுகிறது.
அதில் ஒருவரின் அறியாமை பேராசையால் குற்ற சம்பவம் நடைபெறுகிறது. நகர்ப்புறம் கிராமப்புறம் மக்களை குறிவைத்து அதற்கு ஏற்ப மோசடியில் ஈடுபடுகிறார்கள். இன்று ஒவ்வொரு அலைபேசிக்கும் பல தகவல்கள் வருகின்றன அந்த தகவலை அடிப்படையாக வைத்து தங்களது சுயவிவரத்தை அளிக்கக்கூடாது அப்படி சுயவிவரத்தை அளித்தால் அந்த நபர்கள் மோசடியில் ஈடுபடுவார்கள். எந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தாலும் அந்த அழைப்பின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் மூலமாக பணம் பறிப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், பாலியல் துன்புறுத்தல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றம், போதைப் பொருட்களின் பார்சல் வந்திருப்பதாகக் கூறி நூதன மோசடி என பல வகையான சைபர் குற்றங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகும்போது நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் அல்லது 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். மின்னணு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்புக்கு லிங்க் வரும், அவை பெரும்பாலும் போலியானவை. உடனே அதை கிளிக் செய்து உள்ளே போய்விட்டால் உங்களது அனைத்து விவரங்களும் சைபர் கிரிமினல்கள் கைக்குப் போய்விடும். அதில் கவனமாக இருக்க வேண்டும்.செல்போன் தொலைந்துவிட்டால் அதை எடுத்து யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசின் சிஐஇஆர் போர்ட்டலில் செல்போன் ஐஇஎம்ஐ எண்ணை உடனே பதிவு செய்ய வேண்டும். அதையடுத்து அந்த நம்பர் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
யாராவது தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும்.அதுபோல மத்திய தொலைத் தொடர்புத் துறையின் மற்றொரு போர்ட்டலான sanchar saathi.gov.in-ல் உங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் உங்களது பெயரில் எத்தனை ‘சிம்’ கார்டுகள் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
அதில் தேவையில்லாத ‘சிம்’கார்டுகளை செயலிழக்கச் செய்ய வேண்டுமானால் அது குறித்து மேற்கண்ட போர்ட்டலில் பதிவிட வேண்டும். அடுத்த ஒரு வாரத்துக்குள் செயலிழக்கச் செய்யப்படும். தொலைத்தொடர்பு பயனர்கள் நலன் காக்க அனைவரும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கட்டிடவியல் துறை தலைவர் விக்னேஷ் குமார் இயந்திரவியல் துறை தலைவர் தங்கபாலு மின்னணுவியல் துறை தலைவர் பாரதிராஜா உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் ஜெயலட்சுமி செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் ராஜ சந்துரு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் சீதா உட்பட கல்லூரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளங்கலை பொறியியல் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
