தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஆக- 6. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முடநீக்கியல் (Orthopaedics) துறையில், முதன்முறையாக ஒரு முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Elbow Replacement Surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் மரு. C.பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- திருவையாறு அருகிலுள்ள நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான சுர்யராஜ் என்பவருக்கு, கடந்த ஜூலை 19-ல் நடந்த விபத்தில் இடது முழங்கை கடுமையாக பாதிக்கப்பட்டு அசைவற்ற நிலை ஏற்பட்டதால். முடநீக்கியல் துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

முடநீக்கியல் துறை தலைவர் மரு. த. திருமலைபாண்டியன், இணை பேராசிரியர் மரு. க.கிஷோர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் தலைமையில், நோயாளிக்கு முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த அறுவை சிகிச்சை தஞ்சை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டதோடு, டெல்டா மாவட்டங்களில் (Delta Districts) முதல்முறையாக நிகழ்ந்ததாகும். இதில் முடநீக்கியல் துறையின் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.

இச்சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்ந்ததை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.