திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார்.
தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்பிரேம்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பொன்மலை ரயில்வே பணிமனை வரலாறு குறித்து சிறப்பு விருந்தினர் ஜலால் பேசுகையில்,
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை இந்திய ரயில்வேயின் மிக முக்கிய மற்றும் பழமையான இயந்திரவியல் பணிமனைகளில் ஒன்றாகும். சுமார் 100 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பணிமனை, தென்னக ரயில்வேயின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
பொன்மலை ரயில்வே பணிமனையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.பொன்மலை ரயில்வே பணிமனையின் வரலாறு 1897 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், ‘தென்னிந்திய ரயில்வே’ (South Indian Railways) அமைப்பால் நீராவி என்ஜின்களைப் பழுதுபார்ப்பதற்காக நாகப்பட்டினத்தில் ஒரு சிறிய மத்திய பணிமனை அமைக்கப்பட்டது.
நாட்கள் செல்லச் செல்ல, நாகப்பட்டினத்தின் கடலோரக் காலநிலை மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, பணிமனையை மிகவும் மையமான ஒரு பகுதிக்கு மாற்ற ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அதன்படி, சிறந்த புவியியல் இருப்பிடத்தைக் கொண்ட திருச்சிராப்பள்ளி (திருச்சி) தேர்ந்தெடுக்கப்பட்டது. திருச்சியின் ஒரு பகுதியான பொன்மலையில் பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.
பொன்மலை பணிமனைக்கான அடிக்கல் 1926 டிசம்பர் 20 அன்று திருமதி. R.P. முன்ரோ என்பவரால் நாட்டப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த டி. சாமிநாதன் என்ற புகழ்பெற்ற பொறியாளரால் இந்த பிரம்மாண்ட பணிமனை வளாகம் மற்றும் அதில் உள்ள கட்டடங்கள் கட்டப்பட்டன.
சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற தீவிர கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, 1928 ஜனவரி 16 அன்று பொன்மலை ரயில்வே பணிமனை அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், 26 ஏக்கர் பகுதி மூடப்பட்ட பட்டறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்தக் காலகட்டத்திலேயே உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த பணிமனை உருவாக்கப்பட்டது.
பணிமனைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய பிரத்யேக மின்நிலையம் இங்கு அமைக்கப்பட்டது. திருச்சி மாநகரிலேயே முதன்முதலில் மின்சார விளக்குகள் எரியூட்டப்பட்ட இடமாகப் பொன்மலை ரயில்வே காலனி திகழ்ந்தது.
பணிமனை மற்றும் குடியிருப்புகளின் தேவைக்காகப் பாறையைக் குடைந்து 60 அடி உயரத்தில் ஒரு ராட்சத நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. புவி ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நகருக்குள் தண்ணீர் விநியோகம் செய்யும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது.தொழிலாளர்கள் தங்குவதற்காக 11 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடியில் பிரம்மாண்ட பணியாளர் குடியிருப்பு (ரயில்வே காலனி) உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் (1939–1945) நடந்த சமயத்தில், பொன்மலை பணிமனை ரயில்வே பணிகளைத் தாண்டி நாட்டின் பாதுகாப்புப் பணியிலும் முக்கியப் பங்காற்றியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ‘ராயல் ஏர் ஃபோர்ஸ்’ போர் விமானங்களை பழுதுபார்க்கும் இடமாக இப்பணிமனை பயன்படுத்தப்பட்டது. மேலும், ராணுவத் தேவைகளுக்கான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களைத் தயாரிக்கும் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய ரயில்வேயின் அசுர வளர்ச்சியில் பொன்மலை பணிமனை அங்கம் வகித்தது. 1962 ஆம் ஆண்டு முதல் இங்கு சரக்கு பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய வேகன் தயாரிப்பு பிரிவுகளில் ஒன்றாக இது மாறியது.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலை ரயிலுக்காக (NMR), இந்தியாவின் முதல் உள்நாட்டு நிலக்கரி மற்றும் டீசல் மூலம் இயங்கும் ‘எக்ஸ்-கிளாஸ்’ நீராவி என்ஜின்களை வடிவமைத்து சாதனை படைத்தது பொன்மலை பணிமனை ஆகும்.
இங்கு தயாரிக்கப்படும் மற்றும் பழுதுபார்க்கப்படும் ரயில் என்ஜின்கள் மலேசியா, தான்சானியா, மியான்மர் போன்ற ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப டீசல் என்ஜின்கள் பழுதுபார்ப்பு (DSL Loco POH), பயணியர் பெட்டிகள் மேம்பாடு எனத் தன்னை தகவமைத்துக் கொண்ட பொன்மலை பணிமனை, தற்போது நாட்டின் அதிநவீன ரயிலான வந்தே பாரத் ரயில்களைப் பராமரிக்கும் பிராந்திய மையமாக உருவெடுத்துள்ளது. வந்தே பாரத் ரயில்களின் 18 மாத கால முழுமையான பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் இங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்குள்ள தொழிலாளர்களின் அசாத்திய திறமையால், இந்திய அளவிலான சிறந்த ரயில்வே பணிமனைகளுக்கான தேசிய விருதுகளைப் பொன்மலை பணிமனை பலமுறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினத்தில் ஒரு சிறிய நீராவி என்ஜின் பட்டறையாகத் தொடங்கி, இன்று வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்களைப் பராமரிக்கும் அளவுக்குப் பொன்மலை ரயில்வே பணிமனை வளர்ந்து நிற்கிறது என்றார்.
