பகுதிநேர ஆசிரியர்கள் 12000 பேர் குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க பணி நிரந்தரம் தேவை:

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி கணினி ஓவியம் தையல் இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களை கற்றுத்தர கடந்த 2012-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் சுமார் 16 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமித்து ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

சம்பள உயர்வு 2014-ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017-ஆம் ஆண்டு 700 ரூபாயும், 2021-ஆம் ஆண்டு ரூ.2,300 வழங்கப்பட்டு தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரம் ஆனது.

மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை முன்பணம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம், ஏழாவது ஊதியக்குழு பண சலுகை போன்றவை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றார்கள்.

பணி ஓய்வு, மரணம், ராஜினாமா என கிட்டதட்ட 5ஆயிரம் காலி இடங்கள் ஏற்பட்டதால் தற்போது 12ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றார்கள்.

நான்கு பள்ளிகளில் பணிபுரிந்தால் அதற்குரிய சம்பளம் கிடைக்கும் என அரசாணையில் உள்ளது. ஆனால் காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் கூடுதலாக பணிபுரிய ஒருவருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால் சம்பள உயர்வுக்கும், பணி நிரந்தரத்திற்கும் கோரிக்கை விடுத்தும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என இன்றைய முதல்வர் ஸ்டாலின் அப்போது 181வது வாக்குறுதியை கொடுத்தார்.

உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடி பணி நிரந்தரம் செய்வதாக தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்திலும் வாக்குறுதியை கொடுத்தார். இந்த 377வது வாக்குறுதி திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டது.

10 ஆண்டு பணி புரிந்தால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிரந்தரம் செய்வதாக 153வது வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது.

இதனால் திமுக வாக்குறுதி 181, 377, 153 என மூன்றையும் பகுதிநேர ஆசிரியர்கள் நம்பி பணி நிரந்தரத்திற்கு காத்து உள்ளார்கள்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து பணி நிரந்தரம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் இதுநாள்வரை போராடிக் கொண்டு வருகிறார்கள்.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக பல கட்ட போராட்டங்களுக்கு பின்னரே 2024 ஆம் ஆண்டில் சம்பள உயர்வாக ரூ.2,500 வழங்கியது. ஆனாலும் இந்த பணத்தை தமிழ்நாடு அரசு மாநில நிதியில் இருந்து வழங்குவதால் தனி பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் தனி பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால் இந்த ரூ.12,500 சம்பளம் மொத்தமாக கிடைப்பதில்லை.

தற்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழத்தில் அமுல்படுத்தாததால், மத்திய அரசின் நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இதனால் மொத்த நிதியினையும் மாநில அரசே ஒதுக்க வேண்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ரூ.12,500 சம்பளம் வழங்க மாதத்திற்கு சுமார் 15 கோடி என ஆண்டுக்கு 165 கோடி ஆகிறது.

காலமுறை முறை சம்பளமாக வழங்கினால் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.

அதற்கு மேலும் கூடுதலாக 260 கோடி ஆண்டுக்கு தேவைப்படும்.

இதை செலவாக கருதாமல் பல லட்சம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காவும், 12 ஆயிரம் குடும்பங்களின் எதிர்கால நலனுக்காகவும் செய்ய வேண்டும்.

2011-2012 கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்டு தற்போது 2025-2026 கல்வியாண்டிலும் தற்காலிகமாகவும், குறைந்த தொகுப்பூதியத்திலும் பகுதி நேர ஆசிரியர்களாகவே பணிபுரிவதால் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றார்கள்.

15 ஆண்டு பணி அனுபவத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

இதே உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை சிறப்பு பாடங்களில் காலமுறை சம்பளத்தில் பணிபுரிகின்ற சிறப்பாசிரியர்களின் கல்வித்தகுதியும், இந்த பகுதிநேர ஆசிரியர்களின் கல்வித்தகுதியும் ஒன்று தான்.

எனவே, சம சவேலை, சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி இந்த 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களையும், காலமுறை சம்பளத்தில் சிறப்பாசிரியர்களாக தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.

இதனால் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியும் நிறைவேறிவிடும்.


சி.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

Cell : 9487257203

Email Id: pakuthinera.asiriyarkootamaipu@gmail.com