நீலகிரி மாவட்டன் தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் தார் கலவை (டார் மிக்சிங்) ஆலையின் சுற்றுச்சுவர் இன்று இடிந்து விழுந்ததால் அருகிலுள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்திற்கு முன்னதாகவே இந்த மதிலில் பிளவுகள் உருவாகி இருந்ததுடன், ஆலையின் உற்பத்தி பொருட்கள் — குறிப்பாக ஜல்லி, இரும்புப் படிகள், மற்ற கனரக பொருட்கள் — அளவுக்கு மேல் மதிலின் மேல் பகுதியில் சேர்த்து வைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“நாங்கள் பலமுறை அலுவலகத்துக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தோம். ஆனால் யாரும் எங்களது மனவலியை கேட்கவில்லை. இன்று மதில் இடிந்து வீடு சேதம் அடைந்த பிறகு தான் அனைவரும் விழித்துள்ளனர்,” என ஒரு பாதிக்கப்பட்டர் வேதனையுடன் கூறினார்.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட வீடுகளில் பெரிய அளவில் உடைபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, மக்கள் அதற்குமுன் வெளியே வந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பொருட்கள் சேதம், குழந்தைகள் உட்பட பலருக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்பு ஆகியவை சீர்செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், அந்த ஆலையின் சுற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் தார் பொருட்கள் மற்றும் புகை காரணமாக தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், இது தொடர்பாக பொதுமக்கள் ஏற்கனவே பலமுறை புகார் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இது சும்மா ஒரு மதில் இடிந்த விஷயம் அல்ல. நாளைக்கு தீவிபத்து ஏற்படலாம். ஏற்கனவே இந்த பகுதியில் பல குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். ஏதாவது பெரிய விபத்து நடப்பதற்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அக்கம்பக்க மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தற்போது சம்பவ இடத்திற்கு போலீசார் வருகை தந்து மதில் இடிந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் மற்றும் PRCC ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
