நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக அமைப்பு செயலாளர் / முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் P. தங்கமணி, கட்சியின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் / முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோரை,, பாஜக மாநில துணைத் தலைவர்/ பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் K.P. இராமலிங்கம்,, பாஜக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வருகின்ற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து பணியாற்றுவது, மக்களை பாதிக்கும் வகையில் செயல்படும் திமுகவின் நடவடிக்கைகளை கண்டித்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர்/ முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, அதிமுக பொதுச் செயலாளர் இலட்சக்கணக்கான மக்கள் வரவேற்புடன், மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற மக்கள் சந்திப்பு எழுச்சிப் பயணம் நிகழ்ச்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்க்கும் பொழுது, 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவரை நாமக்கல் வருகை குறித்து அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பி. தங்கமணி, தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்து இந்த முகாமை ஸ்டாலின் நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி ஆளும் திமுக அரசு கவலைப்படாமல், எந்த சந்திப்பு நடத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

அதிமுக பொதுச் செயலாளரின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கிடைக்கும் வரவேற்பு, பாஜக கூட்டணி ஆகியவற்றை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் முதல்வர் ஸ்டாலின்,, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசி வருவது, அவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தையும்,, எங்கள் கூட்டணிக்கு கிடைத்துவரும் பலத்தையும் காட்டுகிறது என்றும் பி. தங்கமணி கூறினார்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், அதிமுக-பாஜக நிர்வாகிகள், தொடர்ந்து அந்தந்த வட்டாரங்களில் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக தலைமையில்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் என்று ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் / உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு முடிவு அனைத்தும் எடப்பாடி பழனிசாமிதான் மேற்கொள்வார். அதனால் வேறு கருத்துகளுக்கு இடமில்லை. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என K.P. இராமலிங்கம் உறுதிபட தெரிவித்தார்.

மேலும் திமுக கூட்டணி உடையுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், வாய்ப்பு இருக்கிறது என்றும் இன்னும் சில தினங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேச உள்ளேன். தலித் சமுதாயத்தின் அறிவுசார் தலைவராக உள்ள அவரை பின்பற்றுகிற இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதை ஒரு நண்பர் என்ற முறையில் அவருக்கு எடுத்துக்கூறி, பல்வேறு விவகாரங்களை நான் பேச உள்ளேன். அவர் அனுமதித்தால் அவரை சந்திப்பேன். கண்டிப்பாக அவர் அனுமதிப்பார். 2026 தேர்தலில் அவர் என்ன வியூகம் வகுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்க வேண்டியுள்ளது. திமுக உடன் அவர் இருந்தால் தலித் சமுதாயத்திற்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்று அவருக்கு தெரிந்தும் வேறு வழியில்லாமல்தான், அந்தக் கூட்டணியில் உள்ளார். திமுக இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறது.

எந்த கட்சியும் தலித் சமுதாய மக்களுக்கு உரிமைகள் வாய்ப்புகள் வசதிகள், அமைச்சரவையில் இடமும் வழங்காத நிலையில் பாரதிய ஜனதா கட்சி, தலித் சமுதாய மக்களுக்கு அவற்றை வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவரை முழுமையாக செயல்படவிடவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில்தான் உள்ளது என்பதை அந்த கட்சியின் தலைமை தெரிவித்துவிட்டது. இதுகுறித்து பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக உழைக்கின்ற இயக்கங்களாக அதிமுகவும் பாமகவும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக திகழ்கின்றன. வன்னிய சமுதாய மக்களுக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கியது அதிமுக அரசுதான். ஆக வன்னியர் சமுதாயத்திற்கு தலைவரும் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் நாமக்கல்லில் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் கே. பி. இராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் / முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா, பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் S. சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P.P. பாஸ்கர், அதிமுக நிர்வாகிகள், பாஜக நாமக்கல் மாவட்ட தலைவர்கள் K.P. சரவணன், M. இராஜேஷ்குமார், கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.