திருவாரூர்., ஜூலை.29
நாகப்பட்டினம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 9 வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை குழிகளில் இருந்து சாக்கடை கழிவு நீர் வெளியேறி தெரு முழுவதும் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றால் இப் பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் திருவாரூர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்த போதும், இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணாமல், அவ்வப்போது பெயரளவுக்கு மட்டுமே சாக்கடை கழிவுகளை மட்டும் வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற சில நாட்களில் மீண்டும் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் வழிந்து ஓடுகிறது. திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு முறையாக தீர்வு காணாமல் தற்காலிகமாக சாக்கடை கழிவுநீரை மட்டும் அகற்றிவிட்டு செல்வதால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனால் பணக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே திருவாரூர் நகராட்சி செயல்படுவதாக கூறி திருவாரூர் நகராட்சியின் கழிவுநீர் வாகனத்தை முற்றுகையிட்டு வாகனத்தை சிறை பிடித்து இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது..இந்த பகுதியில் மொத்தம் 64 குடும்பத்தினர் வசித்து வந்தாலும் அவர்களில் ஒன்பது குடும்பத்தினருக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. மீதமுள்ள பொதுமக்கள் அனைவரும் பொதுவாக உள்ள கழிவறையே பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் அடிக்கடி வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுக்கு மிக முக்கிய காரணம் எங்கள் பகுதியில் அருகே உள்ள மூன்றடுக்கு தனியார் ரெஸ்டாரண்ட் தான் காரணம். அங்கு மொத்தம் 300க்கும் அதிகமான வாடகை ரூம்கள் உள்ளன. மேலும் 3 ரெஸ்டாரண்டுகள் உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் தான் எங்கள் பகுதியில் தேங்கி பாதாள சாக்கடை உடைப்புக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து தனியார் ரெஸ்டாரன்ட் உரிமையாளரிடம் புகார் தெரிவித்த போது நாங்கள் திருவாரூர் நகராட்சிக்கு பணம் செலுத்தி விட்டு தான் செயல்பட்டு வருகிறோம் எனக் கூறியுள்ளனர்.
இது குறித்து திருவார் நகராட்சியிடம் தெரிவித்த போதும் அவ்வப்போது வந்து வெளியேறும் கழிவுநரை மட்டும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணாமல் உள்ளனர்.
ஏழை மக்களுக்கான மக்களான எங்களுக்கு ஒரு நியாயம். பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் என்று செயல்படுவதை விடுத்து உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்
