நாகப்பட்டினம்,ஜூன்.17-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது.
3 போகம் நெல் சாகுபடி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியாக உள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். இது தவிர பருத்தி எள், காய்கறி உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்யப்படும். குறிப்பாக நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
மேட்டூர் அணை திறக்கவில்லை
அதன்படி கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடாததாலும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் சம்பா, தாளடி சாகுபடியும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. வழக்கமாக மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும். ஆனால் தற்போது 80 அடிக்கும் குறைவாக தான் தண்ணீர் உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி அணை திறக்கவில்லை. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
தரிசாக கிடக்கும் விளைநிலங்கள்
தற்போது திருமருகல் ஒன்றியத்தில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் சுணக்கம் காட்டி வருகிறார்கள். காரணம் மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் ஆறுகளில் வர வாய்ப்பில்லை என்பதாலும், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பாதாளத்திற்கு சென்றதாலும் விவசாயிகள் குறுவை சாகுபடிகளில் முன்பு போல ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதனால் எங்கு பார்த்தாலும் விளைநிலங்கள் தரிசாக கிடக்கும் நிலையே உள்ளது. திருமருகல், அம்பல், பொறக்குடி, ஆலத்தூர், மருங்கூர், திருப்பயத்தங்குடி, திருப்புகலூர் என பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக குறுவை சாகுபடி செய்யப்படும் நிலங்கள் தரிசாகவே உள்ளது.
விவசாயிகளும் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபடாமல் உள்ளனர். விவசாயிகள் கவலை வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்வது, இயற்கை உரமாக எரு கொண்டு வந்து கொட்டுவதும், சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்வதும் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
ஆனால் தற்போது எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் தரிசாகவே விளை நிலங்களை போட்டு வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
