தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சி.காளிதாஸ் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வருவாய் ஈட்டுத் தரக்கூடியதாக தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பதிவுக் கட்டணத்தை உரிய முறையில் செலுத்தி, பத்திரப்பதிவு நடைமுறைகளை மேற்கொள்ள விரும்பும் ஏழை எளிய மக்களுக்கு நெரிசலற்ற வெளிப்படையான விரைவான சேவைகளை பெறுவதற்காக தாராபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட குண்டடம் நகரில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல நகரங்களில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் வாகனங்கள் தாராபுரம் நகர் வழியாக சென்று வருகிறது. இதில் வாகனங்கள் தாராபுரம் நகர் பகுதியில் முழுவதுமாக பயணித்து, ஒட்டன்சத்திரம் சாலை வரை போக்குவரத்து நெரிசலை தினமும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தாராபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மேம்பாலத்தை இருபுறமும் நீட்டித்து, பூளவாடி சாலை சந்திப்பில் இருந்து ஒட்டன்சத்திரம் சாலை சந்திப்பவரை மேம்பாலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் வருவாய் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவேற்ற நிலையில், தனித்துவமான கூட்டுறவு வங்கியை மாவட்ட நிர்வாகம் இன்னும் தோற்றுவிக்காமல், முந்தைய கோவை மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளின் கீழ் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்குவது ஏழை எளிய மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் வங்கி சேவை நடைபெறும் முறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. எனவே, புதிய திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை உடனடியாக அமைத்து பொதுமக்கள் பயனடைய செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தொடர்ந்து கோரிக்கை மனுக்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து வலியுறுத்தி வந்தோம். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
