பொள்ளாச்சி
79வது சுதந்திர தின விழா பொள்ளாச்சி பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மலைவாழ் மக்களுக்கு சமுதாய உரிமை பட்டா வழங்கப்பட்டது. இவ்விழாவில் நேர்முக உதவியாளர் விஜயகுமார், தாசில்தார்கள் வாசுதேவன், சசிரேகா, அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாசுதேவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் சல்ட்டானா ரோட்டில் சுதந்திர தின விழா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. முதலுதவி சமூகநல அறக்கட்டளையின் தலைவர் இக்பால் முன்னிலை வகித்தார்.
நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன், வழக்கறிஞர் மருதராஜ், தி.மு.க. நகர துணைச் செயலாளர் தர்மராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் டேஸ்ட்டி பாலு, பாத்திமா, கந்தமனோகரி, துரைபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் உள்பட அனைத்து பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையாளர் கணேசன் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில் நகராட்சி பொறியாளர், நகர்நல அலுவலர், கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
