கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் தேசிய நூலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார் தேசிய நூலக தினம் குறித்து அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது

தேசிய நூலக தினம் இந்தியாவில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நூலக அறிவியலின் தந்தை என்று புகழப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான்கோலன் பகுப்புமுறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்புமுறை எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன.

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் ‘தேசிய நூலக தின’மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. ‘இந்திய நூலகத் தந்தை’ என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்.

நமது பள்ளி நூலகம் 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன மாணவர்கள் நூல்களை எடுத்து வாசித்து பயன்பட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆங்கில ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.