பொள்ளாச்சி, ஆக. 12- பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களின் சிலை மற்றும் பயிற்சி மையமத்தை பொள்ளாச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகாலிங்கம், பழனிச்சாமி ஆகியோருக்கு முழு உருவச் சிலையுடன் நினைவு மண்டபம், இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மையம் மற்றும் நினைவரங்கம் ஆகியவை பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் 1.25 ஏக்கரில், ரூ. 4 கோடியே 28 லட்சத்து 71 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இதனை அடுத்து திறப்பு விழா நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகள் மற்றும் நினைவரங்கத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தலைவர்களின் குடும்பத்தாருடன் சிலைகள் முன்பாக நின்று முதல்வர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் பின்பு கண்காட்சி மையம், நினைவு அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

முதல்வர் வருகையை அறிந்து பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் நீண்ட தூரத்திற்கு பொதுமக்கள் குவிந்தனர். முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்த போது பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்பளித்தனர் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.