பொள்ளாச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் அறங்காவலர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோயிலுக்கு ரு. விஜயகுமார், சு. கௌரி, மா. மயில்சாமி, க. நடராஜன், க. பத்ரகிரி ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் ஆகியன நேற்று கோவில் வளாகத்தில் நடந்தன கோவை மாவட்ட உதவி ஆணையர் விஜயலட்சுமி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், கோயில் ஆய்வர் கோகிலவாணி ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், தலைவருக்கான தேர்தல் நடந்தது.

இதில் அறங்காவலர்கள் அனைவரும் ஒருமனதாக விஜயகுமாரை தலைவராக தேர்ந்தெடுப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர். இதனை அடுத்து அறங்காவலர் குழு தலைவராக விஜயகுமார் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பார்த்திபன், நகர தி.மு.க. துணைச் செயலாளர் தர்மராஜ், வழக்கறிஞர் சாதிக் அலி, நகராட்சி கவுன்சிலர்கள் பாத்திமா, பாலகிருஷ்ணவேணி உட்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இக்கோயிலுக்கு பரம்பரை முறைவழி சாரா
அறங்காவலர்கள் நியமிக்க இந்து சமய அறநிலையத்துறையின் கோவை
ஆணையரால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் வரப்பெற்ற
அனைத்து விண்ணப்பங்களும் சரக ஆய்வர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கூர்ந்தாய்வுக்குப் பின்னர் மாவட்டக் குழு கூட்டத்தில் நான் உட்பட ஐந்து பேர் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டோம்.
அறங்காவலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டோம்.

தொடர்ந்து மற்ற அறங்காவலர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் நான் அறங்காவலர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் மகாலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக தொடர்ந்து பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பையும் சிறப்பாக மேற்கொள்வேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.