ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் மீண்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி, மீனவர் சங்கத்தினர் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூரில் உள்ள 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தியூர் வனப் பகுதி, தந்தை பெரியார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால், வனத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க வனத்துறை தடை விதித்தது.
மீண்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என, பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், மாவட்ட கலெக்டர், வனத்துறைக்கு மனு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், மீனவர் சங்கத்தினரை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்த, அந்தியூர் ரேஞ்சர் முருகேசன், சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிக்கப்படும் எனவும், கடிதத்தையும் சங்கத்தினரிடம் கொடுத்தார்.
அக்கடிதத்தில், காலாண்டுக்கு ஒரு முறை பெரிய மீன்களை பிடிக்க வேண்டும், பகல் நேரத்தில் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் என்பன உட்பட பல கட்டுப்பாடுகள் இருந்தன. இதை படித்து அதிர்ச்சியடைந்த மீனவர் சங்கத்தினர், வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிபந்தனையாக இருக்கிறது எனக்கூறி, வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறும்போது, அனுமதி மறுக்கப்படுவதால், கோரிக்கையை வலியுறுத்தி வரும் 4ம் தேதி, வனத்துறை அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
