தங்க நாணயத்தை புழக்கத்தில் விட்ட மெட்ராஸ் பிரசிடென்சி!

திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார்.முதல்வர் ஸ்டெல்லா மேரி முன்னிலை வகித்தார்.

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் சங்க கால நாணயங்கள் முதல் குடியரசு இந்திய நாணயங்கள் வரை காட்சிப்படுத்தி விளக்கினர்.

பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் நட்சத்திர பகோடா நாணயம் குறித்து பேசுகையில்,”நட்சத்திர பகோடா” என்பது கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸ் பிரசிடென்சியில் அச்சிடப்பட்ட ஒரு தங்க நாணயமாகும். இது நட்சத்திர பகோடா என்று அழைக்கப்பட்டது.

சுமார் 3.40 கிராம் எடையுள்ள தங்க நாணய முகப்பில் விஷ்ணு பின்புறத்தில் ஒரு நட்சத்திரம் பொறிக்கப்பட்ட இந்த நாணயங்கள், 1740 முதல் 1807 வரை புழக்கத்தில் இருந்தன என்றார்.