400 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த மதுரை கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய தலைவராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பொறுப்பேற்கிறார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம் கிராமத்தில் சவரிமுத்து- மரியம்மாள் தம்பதிகளின் இளைய மகனாக 1960 ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி பிறந்தார். தொடக்கக்கல்வியை வண்டானத்திலும் மனப்பாட்டிலும் பயின்ற இவர் மேல்நிலைக் கல்வியை மதுரை கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரியில் பயின்றார்.

தனது குருத்துவப் பயிற்சியை பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை குரு மடத்தில் முடித்தார். 1987 ம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி பாளையங்கோட்டை மறை மாவட்டத்திற் கென குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.

பாளையங்கோட்டை ஆயரின் செயலராக, குரு மட அதிபராக, திருஅவைச் சட்ட பேராசிரியராக, பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதன்மை குரு என பல்வேறு பணிகளை வகித்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் நாள் (மறைந்த) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ஆயராக அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 15 ம் நாள் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்தரை ஆண்டுகள் பாளையங்கோட்டை ஆயராகப் பணியாற்றிய நிலையில் கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை உயர்மறை மாவட்ட பிஷப் அந்தோனி பாப்புசாமி ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு ஆயராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்தோனிசாமி சவரிமுத்துவை மதுரை உயர்மறை மாவட்டத்தின் புதிய பேராயராக அறிவிக்கப்பட்டார். புதிய பேராயரின் பொறுப்பேற்பு நிகழ்வு ஆகஸ்ட் 2 ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்குத் திருத்தந்தைக்கான இந்தியத் தூதர் மேதகு ஜியோபோல்டோ ஜெரல்லி தலைமை வகிக்கிறார்.

தமிழக ஆயர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும், இறை மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை உயர்மறை மாவட்டத் தொடர்பாளர் தந்தை ஜெரோம் ஏரோனிமுஸ் செய்து வருகிறார்.