திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள முண்டுவேலம்பட்டியில் ஏராளமான தனியார் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காற்றாலைகளில் ஒன்றின் மேல் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதிகப்படியான உராய்வினால் காற்றாலையின் மேற்பகுதி தானாக தீப்பற்றிக் கொண்டதாக காற்றாலை நிர்வாக மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- இன்று இங்கு நடைபெற்றது

போன்று நேற்று இரவு நிழலிகவுண்டம் பாளையம் பகுதியில் ஒரு காற்றாலை தீப்பற்றி எறிந்து அருகில் இருந்த 5 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள காற்றாலை ஒன்று உடைந்து விழுந்தது.இந்த காற்றாலைகளின் அருகில் விவசாய நிலங்கள்,வீடுகள் இருந்து வரும் சூழலில் இதுபோன்ற தொடர் விபத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த மூன்று காற்றாலை விபத்துகளிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தற்போது தாராபுரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் இது போன்ற விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் தனியார் காற்றாலை நிர்வாகத்தினர் முறையாக பராமரிப்பு செய்யாமல் காற்றாலைகளை இயக்குவதே ஆகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து தனியார் காற்றாலைகளிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு அவற்றின் தன்மையை கண்டறிய வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கும் என. விவசாயிகள் தெரிவித்தனர்.