டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரை சேகரிக்க நீர் வழித்தடங்களை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை நீங்கலாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நூறு சதவீத மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும், மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை குறைவு போன்ற காரணங்களால் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் பல இடங்களில் நிரம்புவதில்லை. சில இடங்களில் குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இன்றி தொடர்ந்து வறண்டே காணப்படுகிறது.

இதனால் மீன் வளர்ப்பு பாதிப்பு அடைகிறது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை ஜுன் 12 ஆம் தேதியும், கல்லணை 15 ஆம் தேதியும் தமிழக முதல்வரால் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

தற்போது மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவேரியின் கிளை நதிகளான வெட்டாறு, வெண்ணாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் பாசனத்திற்கு தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளுக்கு செல்லக்கூடிய நீர் வழித்தடங்களை சரி செய்து நீர் நிலைகளை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு மீன் வளர்ப்பு மூலம் உரிய வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் உரிய நேரத்தில் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்களில் நீர் நிரப்பி ஏலம் விடுவதன் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அதோட தனி நபர்களின் நீர்நிலைகள் நிரம்புவதை அடுத்து மீன் வளர்ப்பு சிறப்பாக அமையும். டெல்டா மாவட்டங்களில் ஏனைய இடங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் இணைந்து குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.