செய்தியாளர்: எஸ். திருபாலா.
அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள புதுப்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், அத்தாணி, வெள்ளித்திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில், மாசி பட்ட பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.
அறுவடை காலம் துவங்கியுள்ளதால், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டுக்கான பருத்தி மறைமுக ஏலத்தை துவக்க வேண்டும் என, விவசாயிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ., வெங்கடாசலம் கலந்து கொண்டு பருத்தி ஏலத்தை துவக்கி வைத்தார்.
அந்தியூர், கோபி சுற்று வட்டாரத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 351 மூட்டைகளில் 10 டன் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். குறைந்தபட்சம் கிலோ 68.49 முதல் அதிகபட்சமாக கிலோ 75.69க்கும், சராசரியாக 73.19க்கும் என, மொத்தம் 7.50 லட்சத்துக்கு ஏலம் போனது.
அடுத்தடுத்த வாரங்களில் பருத்தி வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோபி, அன்னூர், புளியம்பட்டி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து 15 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி துணை தலைவர் பழனிசாமி, வேளாண்மை துணை சாவித்திரி, அந்தியூர் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர், பூதப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரவின் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
