தற்காலிக ஒத்திவைப்பு இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகத்தில் அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்ற கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜகான் தலைமையில் சமரச கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் செயல் அலுவலகர் அ.செல்வராஜ், முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டத் தலைவர் ராஜேஷ், நிர்வாகிகள் முனியசாமி, மயில்சாமி, தங்கப்பாண்டி, ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சமரச கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு ஏலம் விடும் பொழுது நடைமுறையை பின்பற்றப்படும் எனவும், பேரூராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகளை ஏலம் விடும் பொழுது மாற்றுத்திறனாளி சங்கத்திற்கு முறையாக அறிவிப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது.
