கோவை

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அண்மையில் நேபாளம் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பூட்டான், பங்களதேஷ், நேபாளம், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். இதில் இந்தியா சார்பாக தமிழ்நாட்டில் இருந்து கோவையைச் சேர்ந்த 4 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், சுருள் வால், சிலம்பம் சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் கோவை வடவள்ளி வருண் தற்காப்பு கலை அகாடமியை சேர்ந்த நான்கு மாணவ மாணவிகள் 12 தங்கம் 3 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள்,பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஆர்வமுடன் உள்ளதாகவும், நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பொருளாதார ரீதியாக பல போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும், எனவே தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் எங்களுக்கு உதவி செய்தால் மேலும் பல நாடுகளுக்கு சென்று போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தார்.