தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். உடன் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர் வளத்துறை சார்பில் காவிரி,வெண்ணாறு,கல்லணை கால்வாய் ஆகிய கோட்டங்கங்களில் வாய்க்கால்களில் தூர் வாரும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேற்படி வேலைகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ 22.28 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு வாய்க்கால் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியில் பொக்லைன் இயந்திரம் 7 தினங்களில் வேலை செய்து முடிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு ரூ 10000 வாடகை அதிக பட்சம் 5 அல்லது 10 சதவிகிதம் பணிகள் மட்டுமே நடக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு வாய்க்கால்களில் நீர் மேலாண்மை செய்து தண்ணீர் பாசனம் செய்யவோ வடிகால் வசதி செய்யவோ வாய்ப்பில்லாமல் போகிறது. விவசாயிகளுக்கு வாய்க்கால்கள் தூர் வாரி தருவதாக கூறி வாய்க்கால் வெட்டில் வரலாறு காணாத மோசடி செய்து வருகிறார்கள்.
எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் ஒவ்வொரு கோட்டத்திலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பறக்கும் படை அமைத்து வாய்க்கால் வெட்டில் முறைகேடுகளை உடனடியாக தடுக்க வேண்டுகிறேன். வாய்க்கால் வெட்டி நடைபெறும்
அனைத்து கிராமங்களில் விவசாயிகள் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்களை உடனே அமைக்க வேண்டுகிறேன் என்றார்.