தாராபுரம்,செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617- ஆவது இடம் பிடித் துள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024- ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணிகள் தேர்வில் இறுதிநிலை நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
இதில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே உள்ள வெறுவேடம்பாளையத் தைச் சேர்ந்த சி.மோகனதீபிகா (23) என்ற மாணவி இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார்.
இது குறித்து மாணவி மோகனதீபிகா கூறியதாவது:
விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் முடித்தேன்.
எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யுபிஎஸ்சி தேர்வு எழுத தயாரானேன். இதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.
மேலும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழக அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இவரது தந்தை சந்திரசேகர், தாய் ராஜேஸ்வரி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். மோகனதீபிகாவின் சகோதரர் செல்வதீபக் (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.