சீர்காழி, ஆக. 4:

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோவிலில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே, திமுக ஒன்றியக் கழகச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவினர் மீது பொய்வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், உதயநிதி ஸ்டாலினை கைது செய்த காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அரசு பேருந்தில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக மயிலாடுதுறை–சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியிலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் தலைமையில், பேரூர் கழகச் செயலாளர் அன்புச் செழியன் உள்ளிட்ட சுமார் 30 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அவர்களை வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *