புவனகிரி ஜூன்-14

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சி மற்றும் மருத்துவர்களின் நலனை வலியுறுத்தி, உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மனுவை சங்கத்தின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஞான. சுந்தரபாண்டியன்,
செயலாளர் மரு. மு.செ.ர. குபேரன், பொருளாளர் மரு. வை. கவியரசு மற்றும் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், சங்கத்தின் தலைவர் கற்பசித்தர் மரு. நாகவேல் நேரில் சந்தித்து, சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண் ராஜ் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தார்.

மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகளில் பாரம்பரிய மருத்துவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் நல வாரியம் அமைத்தல், அரிய மூலிகைகளை பாதுகாத்தல், பாரம்பரிய மருத்துவத்திற்கென தனிப் பல்கலைக்கழகம் மற்றும் சிறப்புப் படிப்புகள் தொடங்குதல், நவீன அறிவியல் சார்ந்த பயிற்சிகளை வழங்குதல், உலகளாவிய அங்கீகாரம் பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஓலைச்சுவடிகளை மீட்டு பாதுகாத்தல், அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் அமைத்தல், கல்வி மற்றும் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் பழங்குடியினர் மருத்துவ முறைகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பாரம்பரிய மருத்துவ முறையையும், அதனைச் சார்ந்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், இந்த 13 அம்சக் கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழ் பாரம்பரிய மருத்துவ சங்கம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *