கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு சமூக நல முயற்சியை தொடங்கியுள்ளது.

இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் போட்டியாளர்கள், பெண்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பெண்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, முறையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது.

உங்கள் குரல் மக்களிடம் சென்று சேரும் போது, அதை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்துங்கள் என்ற வலிமையான கருத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த தளத்தின் மூலம் போட்டியாளர்கள் விழிப்புணர்வு தூதர்களாக செயல்பட்டு, புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையை பெறுவதின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே தகவல்களை பரப்பவுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ஹர்ஷினி – ராவ் மருத்துவமனை, திருமதி சித்ரா மனோகர் – தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர், திருமதி ரேஷ்மா ஸ்ரீஜய் – ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் மற்றும் குயின் கோயம்புத்தூர் & பிரின்சஸ் கோயம்புத்தூர் அமைப்பின் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோட்வானியும் இந்த முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, பெண்கள் தங்களது உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தி, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்கு தனது வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளார்.

நிகழ்ச்சியின் போது டாக்டர் ஹர்ஷினி, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து விரிவாக உரையாற்றவுள்ளார்.

இந்த முயற்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், இன்றைய அழகிப் போட்டிகள் வெறும் திறமைகளை வெளிப்படுத்தும் மேடைகளாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளன. மக்களை அர்த்தமுள்ள சமூகக் காரணங்களின் நோக்கில் வழிநடத்தும் சக்தி இத்தகைய தளங்களுக்கு உள்ளது என்றனர்.

ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் இந்த முயற்சி, பெண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் நலனில் அதிக கவனம் செலுத்தி, விழிப்புணர்வு, கல்வி மற்றும் ஆரம்பகட்ட பரிசோதனைகள் மூலம் பாதுகாப்பான வாழ்க்கையை தேர்வு செய்ய ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆரம்பகட்ட கண்டறிதல் உயிர்களைக் காப்பாற்றும் என்ற முக்கியமான செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த கூட்டுமுயற்சியின் பிரதான நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *