தொடர் மழையால் மன்னார்குடி , நீடாமங்கலம் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்கள் முழுவதும் மழைநீரில் முழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலை…
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணியானது மாவட்ட வேளாண்துறை மூலம் 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, தாளடி, சம்பா என மூன்று பருவ சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் பருவமழையினை நம்பி ஒருபோக சாகுபடியாக மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடி பணியானது கடந்த சில நாட்களாக முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு சம்பா நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இத்தகைய சம்பா இளம் பயிர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் முழ்கியது. நடவு செய்யப்பட்டு 25 நாட்களே ஆன இப்பயிர்களின் வேர்களை சூழ்ந்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் வேர்கள் அழுக தொடங்கியுள்ளது.
ஒருபோக சம்பா சாகுபடி பணியினை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தற்போது பயிர்களின் வேர் அழுகதொடங்கியதால் மிகுந்த மனவேதனையில் தவித்து வருகின்றனர்.
