திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணியானது சுமார் 1.92 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய குறுவை நெல் அறுவடை பணிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இத்தகைய நெல்லை உடனுக்கு உடன் கொள்முதல் செய்ய ஏதுவாக தமிழக அரசு இம்மாவட்டத்தில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் அவைகள் பல்வேறு கட்டங்களாக அரவை ஆலைகளுக்கும், கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நெல் மூட்டைகள் தேக்கம் இன்றி விரைவாக கொள்முதல் செய்திட முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு; அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் 156 லாரிகள் வாயிலாக கொண்டுவரப்பட்டன.

அவை அனைத்தும் சரக்கு ரயில்களில் மாற்றப்பட்டு அவை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இத்தகைய பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆய்வு செய்தார்.

அப்போது நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் நெல் மூட்டைகள் சேதம் இன்றி இயக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.