கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்-1 அளவிலான ஹாக்கி போட்டிகள் 11ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளி செயலரும் சிந்தனை கவிஞருமான கவிதாசன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
சி.பி.எஸ்.சி தெற்கு மண்டலம்-1 இல் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும், யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகள் ஆகியவற்றிலிருந்து 35 பள்ளிகளைச் சேர்ந்த, 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஹாக்கி போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நாக்அவுட் மற்றும் லீக் சுற்றுகள் முறையில் போட்டிகள்நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, தேசிய அளவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
