விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிங்டம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.திரைப்படமானது ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிவந்துள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையும் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து படத்தை திரையிடுவதை தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள ராஜா திரையரங்கில் கிங்டம் திரைப்படம் வெளியாவதாக நேற்று (வியாழக்கிழமை ) இரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் இன்று (08.08.2025) வெள்ளிக்கிழமை காலை ராஜா திரையரங்கம் முன்பாக கூடிய 40-க்கும் மேற்பட்ட பெரம்பலூர் மாவட்ட நாம்தமிழர் கட்சியினர் திரையரங்க மேலாளரை சந்தித்து பேசியபோது திரையரங்க நிர்வாக தரப்பிலிருந்து கிங்டம் திரைப்படம் திரையிடப்படவில்லை என்பதை உறுதிசெய்தனர்.தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதுநாள் வரை கிங்டம் திரைப்படத்தை தங்கள் திரையரங்கில் வெளியிடாததற்கு நன்றிகளையும், இனிவரும் நாட்களிலும் கிங்டம் திரைப்படத்தை வெளியிடக்கூடாது, மீறி வெளியிடும் பட்சத்தில் பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெறும் என்பதை வலியுறுத்தி கடிதம் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
தொடர்ந்து பெரம்பலூர் நகர்பகுதியில் அமைந்துள்ள ராம், கிருஷ்ணா, சுவாமி ஆகிய திரையரங்கங்களுக்கும் அக்கட்சியினர் நேரில் சென்று கிங்டம் திரைப்படம் வெளியிடக்கூடாது என்பதை வலியுறுத்தி கடிதங்களை வழங்கினர். இதனால் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
