திருச்சி மாநகரின் முக்கிய பகுதியாக தில்லைநகர் உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவமனைகளும், வணிக நிறுவனங்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. மிகவும் அகலமான சாலைகள் கொண்ட தில்லைநகரில் தினந்தோறும் புதிதாக வணிக நிறுவனங்கள், ஜவுளிகடைகள், ஓட்டல்கள் என உருவாகிக் கொண்டே உள்ளன.
இந்த நிலையில் தில்லைநகர் 1-வது குறுக்குசாலை முதல் 5-வது குறுக்குசாலை வரை இரட்டைவாய்க்கால் சாலை பகுதியில் சுமார் 200 முதல் 300 மீட்டர் நீளத்தில் சாலையோர பூங்கா அமைய உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.1 கோடி 58 லட்சத்தில் இந்த பூங்கா அமைகிறது. இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, முதியவர்கள் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வண்ண வண்ணச்செடிகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மேலும், வண்ண ஓவியங்களும் வரைந்து அழகுபடுத்தப்பட உள்ளன. பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரட்டைவாய்க்கால் சாலையில் பூங்கா அமையும் சாலையோர பகுதி மணல் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா கட்டுமான பணிகளை 6 மாதங்களுக்குள் முடித்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.
