கமுதியில் உள்ள முசாபர் அவுலியா தர்ஹா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்ஹா ஆகும். பெரிய தர்ஹர என்று அழைக்கப்படும் இந்த தாஹாவின் சந்தன கூடு திருவிழா வருடா வருடம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு சுந்தரபுரம் பகுதியில் உள்ள தைக்கா வீட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. பேரூராட்சி தலைவரும், தர்ஹா நிர்வாகியுமான அப்துல் வஹாப் சகாராணி தைக்கா வீட்டில் இருந்து, மலர்களால் அலங்கரிங்கப்பட்ட சந்தனம் நிறைந்த குடத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்ட மிகப்பெரிய கூடுக்குள் வைத்து இந்த ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சுந்தரபுரம் – பள்ளிவாசலில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு கமுதி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது, ஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் தீப்பந்தம் சுற்றியும், பேண்டு வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன், இறை பாடல்கள் பாடி ஊர்வலமாக வந்து நேற்று அதிகாலை 6 மணி அளவில் தர்ஹாவை இந்த ஊர்வலம் அடைந்தது.

வழி நெடுகிலும் அனைத்து மதத்தினரும் மல்லிகை பூவினை சந்தன கூடு மீது போட்டு வழிபட்டனர்.இந்த சந்தனக்கூடு விழாவில் ஏராளமான முஸ்லீம் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த சந்தன கூடு திருவிழா மத நல்லிணக்க விழாவாக அமைந்தது.