திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…
ஆட்சியாளர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பது மாறி தற்போது ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் வாக்காளர்களை தேர்ந்தெடுப்பதற்கான சூழலை தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் நடத்திக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தின் பணி நடுநிலைமையை இழந்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக அமைகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகிருப்பது வரவேற்கக் கூடிய ஒன்று. பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்று ஓபிஎஸ் தற்போது உணர்ந்திருக்கிறார். மோடிக்கும் ட்ரம்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு பேரும் நண்பர்கள் என்று கூறுவது பொருத்தமானது தான்.
ஆனால் இந்திய பொருளாதாரத்தை நிலை குலைய வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் ட்ரம்பின் நடவடிக்கையை எதிர்க்காமல் இருக்கும் இந்தியாவின் நடவடிக்கை கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மிக சிறப்பான ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. சாதாரண சாமானிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களுடைய ஆதரவைப் பெற்ற அரசாக இந்த அரசு விளங்குகிறது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து இயங்கும் . எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாஜகவுடன் அதிமுக பயணிப்பதை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருந்து அதிமுகவில் பயணம் செய்த அன்வர் ராஜா விலகி இருப்பதே அதிமுக கட்சியின் நிலவரத்தை காட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் என்பது மாயத்தோற்றம்.
இந்த பயணத்திற்கு மக்கள் ஆதரவும் இல்லை அந்தக் கட்சியின் ஆதரவுமில்லை. ஆணவ படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆணவ படுகொலையை தடுப்பதற்கு ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது தான் பிரதமர் பதவியின் முக்கியமான பணி என்று மோடி கருதுகிறார் என்றார்.
