அந்தியூர் 1வது வார்டுக்குட்பட்ட சீதாலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள பொது மயானம் பகுதியில், நாள்தோறும் பேரூராட்சியின் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. நீண்ட காலமாக குப்பை கொட்டப்படுவதால், குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதுதவிர, ஒரு சில மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவக் கழிவுகளையும், இதே பகுதியில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். குப்பைக் கழிவுகளை கொட்டி செல்லும் பேரூராட்சி ஊழியர்களும், சில சமூக விரோதிகளும், மாலை நேரத்தில் தீ வைத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள், காகிதங்களிலிருந்து வெளியேறும் புகை, இரவு முழுவதும், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரிலுள்ள குடியிருப்பை சூழ்கிறது. குப்பை கழிவு புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து. 1வது வார்டு அதிமுக கவுன்சிலர் சரஸ்வதி, இது சம்பந்தமாக, அந்தியூர் வட்டார சுகாதாரத்துறையினருக்கு புகாரளித்தார்.

இந்நிலையில், நேற்று, சீதாலட்சுமி தியேட்டர் எதிரிலுள்ள மயானம் பகுதிக்கு சென்ற, வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுகாதார சீர்கேடு நிலவுவதை உறுதி செய்த சுகாதாரத்துறையினர், குப்பைகளை கொட்டி சீர்கேடு ஏற்படுத்த வேண்டாம் என, பேரூராட்சி நிர்வாகத்துக்கும், மருத்துவ கழிவை கொட்டும் மருத்துமனை நிர்வாகத்துக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கழிவுகளை கொட்டினால், மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது, 1வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, மீனவரணி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.