காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள், அந்தப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பெற்றோர்கள்,அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி கட்டிடம் கட்டி தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் யமஹா மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டம் நிதி உதவியின் கீழ் சுமார் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
12 வகுப்பறைகள், மாணவ மாணவிகளுக்கு தனித்தனி சுகாதார வளாகம், சத்துணவு சமையல் கூடம், 10 கிலோ வாட் சூரிய ஒளி திட்டம், 20 கணினிகளுடன் கூடிய வகுப்பறை மற்றும் குடிநீர் வசதி, சிசிடிவி கண்காணிப்பு வசதி,நேரம் தவறாமல் ஒலிக்கும் அதிநவீன மணியோசை, அதிநவீன மேஜை நாற்காலிகள், மின்விசிறிகள் பள்ளி சுற்றுச்சுற்று சுவர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் தனியார் பள்ளியை போல் கட்டி முடிக்கப்பட்ட அரசு உயர் நிலைப் பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில், துணை மேயர் குமரகுருநாதன் முன்னிலையில் நடைபெற்ற
திறப்பு விழாவில் யமஹா பன்னாட்டு நிறுவனத்தின் சேர்மன் ஈட்டாரு ஓட்டாச்சி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.பி.என்.பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
மேலும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பைகளையும் வழங்கினார்கள் மேலும் நபார்டு வங்கி கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 88 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிகல்லையும் நட்டு வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி,மண்டல குழு தலைவர் சந்துரு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு பள்ளி ஆசிரியைகள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தனியார் தொழிற்சாலை அலுவலர்கள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
