தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் 765 கே.வி உயர் மின் கோபுர திட்டம் அமைக்க. பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு!.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் திருப்பூர் முதல் விருதுநகர் வரையிலான 765 கே.வி உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியங்காட்டுத் தோட்டம்
கோனேரிபட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் விவசாயிகள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் மின் கோபுரங்களால் விவசாயிகள் பாதிப்பு
பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிதாக உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இப்பணிகள் முடிக்கப்பட்டால் தங்களது பகுதி முழுவதும் இன்னும் சில ஆண்டுகளில் உயர் மின் அழுத்த கம்பிகளால் பாகற்காய்க்குப் பந்தல் அமைத்தது போல் ஆகப்போகிறது.
எந்தவொரு திட்டத்துக்கு நிலம் எடுப்பதாக இருந்தாலும், பயன்படுத்திக்கொள்ளும் உரிமையாக இருந்தாலும் யாருடைய நிலம், பரப்பளவு, சர்வே எண், அதற்கான இழப்பீடு எவ்வளவு போன்ற விவரங்களை அரசு வெளியிடுவதுதான் நடைமுறை. ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.
இது விவசாயிகள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல, அரசின் எந்தவொரு திட்டத்துக்கு நிலம் தேவைப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளரிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் நிலம் குறித்து கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்தவில்லை.
இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டம் 2013-ன்படி அரசினுடைய திட்டங்களுக்கு நிலம் எடுப்பதாக இருந்தால் 70% விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும். தனியார் திட்டங்களுக்கு நிலம் எடுத்தால் 80% விவசாயிகளின் எழுத்துபூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டும்.
நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்தும் நிலத்துக்கு நகர்ப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் இரு மடங்கும் கிராமப்புறமாக இருந்தால் சந்தை மதிப்பில் நான்கு மடங்கும் இழப்பீடாகத் தர வேண்டும்.
மாற்று நிலம் தர முயற்சிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிலத்தை இழக்கக்கூடிய விவசாயிகளையும் அதைச் சார்ந்துள்ளவர்களையும் பாதுகாக்கும் வகையில் உள்ளன. இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் எதுவும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை கோனாபுரம்,தாராபுரம்,
கொளத்துப்பாளையம், போன்ற விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது இதனை அரசு நிவர்த்தி செய்தால் மட்டுமே தங்கள் பகுதியில் உயர்ந்த கோபுரம் அமைக்க விவசாயிகள் அனுமதிப்போம் என ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதில் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
